40 சோழநாட்டு திவ்யதேசங்களின் பாடல் தொகுப்பு - "உயர் திருவரங்கம் உறையூர் தஞ்சைஅயர் வகற்றிடும் அன்பில் கரம்பனூர்புகழ் வெள்ளறை புள்ளம் பூதங்குடிஅந்தமில் பேர்நகர் ஆதனூர் அழுந்தூர்போதமருட் சிறுபுலியூர்ச் சேறைமாதலைச்சங்க நான்மதியங் குடந்தைவிரவு கண்டியூர் விண்ணகர் கண்ணபுரமுடனாலி பொன்னாகை நறையூர்நத்துநந்தி புரவிண்ணகர மிந்தளுர் திருச்சித்திரகூடஞ் சீராம விண்ணகரம்கூடலூர் கண்ணங்குடி ண்ணமங்கை
வீடருள் கவித்தலம் வெள்ளியங்குடிவண்ண மணி மாடக்கோவில் வைகுந்த விண்ணகரம் மரிமேய விண்ணகரம் திருத்தேவ னார்த்தொகை சிறந்த தாயவண் புருடோத்தமஞ் செம்பொன் செய்கோயிலேபாவனத் தெற்றியம்பலம் பல ணிக்கூடங்
காவளம் பாடிக் கவின் வெள்ளக்குளம் துதி பார்த்தன் பள்ளிசேர், சோழநாட்டுப் பதியதோர் நாற்பதும் பணிந்து போற்றுவோம்". |
|
ஸ்ரீமந் நாராயனனின் வடிவங்கள் - மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ. இவன் ஒருவனே இறைவன். சகல ஜீவராசிகளுக்கும், தேவர்களுக்கும், ஸர்வ லோகங்களுக்குமான ஒரே ஆத்மா. அவன்தன் நாம கீர்த்தனையும், அவன் தாழ் பணிந்து கிடப்பதுமே என் பிறவிக் கடன்" என தன்னை ஸரணாகதி அடையும் பக்தர்களுக்காக, பரந்தாமன் ஐந்து வகை வடிவங்களில் தரிசனம் அருள்கின்றார். பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம் மற்றும் அருட்சை. பரம் என்பது பரமபத திருக்கோலம். திருமகள், பூமகள் மற்றும் நீளாதேவி என தன் தேவிமார் மூவருடன் பரவாசுதேவனாய் காட்சி தரும் திருக்கோலம். |
பசி், சோம்பல், தாகம், தூக்கம் என மானுடர்களுக்கே உரித்தான எந்த ஒரு உணர்வும் இல்லாத " நித்ய சூரி்கள் " அனுதினமும், மூன்று தேவியருடம் எழுந்தருளியிருக்கும் பரந்தாமனின் திருவழகில் மதி மயங்கி சாம கானத்தில் போற்றிப் பாடி மகிழ்ந்திருக்கும் உலகமே பரமபதம். இந்த நித்ய சூரிகளின் ஆலாபனையில் பரந்தாமன் மனம் மகிழ்ந்து இன்புற்று காட்சியருளும் திருக்கோலமே பரம் எனப்படும். வ்யூகம் என்பது பாற்கடல் திருக்கோலம். ஸ்ரீமந் நாராயணன், பரமபதம் எனும் வைகுண்டத்திலிருந்து எழுந்தருளி வெள்ளையத் தீவு, ஷீராப்தி என்றெல்லாம் வணக்கப்படும் பாற்கடலில் தன்னை, கிழக்கு நோக்கிய சாந்த முகம் கொண்ட வாசுதேவனாகவும், தெற்கு நோக்கிய சிங்க முகம் கொண்ட சங்கர்ஷணனாகவும், வடக்கு நோக்கிய வராக முகம் கொண்ட பிரத்யுமனனாகவும், மேற்கு நோக்கிய ருத்ர முகம் கொண்ட அநிருத்தனாகவும் வியூகப்படுத்தி, பக்தர்களின் தரிசனத்திற்காக, திருமகளும், பூமகளும் திருவடி வருட, ஆதிசேஷனின் மீது யோக நித்திரை கொண்டு அறிதுயிலமர்ந்த நிலையில் காட்சி தரும் திருக்கோலமே வ்யுகம் தேவர்கள் தமக்கு துன்பம் நேரிடும்போதெல்லாம் இங்கு வந்து முறையிடுவதால் இதற்கு கூப்பாடு கேட்கும் உலகம் என்று பெயர்.
விபவம் என்றால் இறங்கி வருதல் எனப் பொருள். பக்தர்களை துன்பங்களிலிருந்து காக்க வேண்டி பரமபதம், பாற்கடல் என்ற உலகிலும் இருந்து இறங்கி வந்து பூர்ணாவதாரம், அமிசாவதாரம் மற்றும் ஆவேச அவதாரம் என அவதார தரிசனங்கள் தருவது விபவம். ராம, கிருஷ்ண, வாமன மற்றும் பரசுராம அவதாரங்கள் பூர்ணாவதாரங்கள். மச்சமும் வராஹமும் அமிசாவதாரங்களாகும். நரசிம்மம் ஆவேச அவதாரமாகும். அந்தர்யாமித்வம் என்பது ஒவ்வொரு ஜீவராசிகளிடத்திலும் அவற்றின் உள்ளிருந்து இயக்குவதாகும். அந்தர்யாமித்வம் என்றால் மறைமுகமாக எனப் பொருள். ஜீவராசிகளிடம் அவற்றின் உள் உணர்வாய், மறைமுகமாய் தன் சக்தியை வெளிப்படுத்தி காட்சி தருவதே இத் திருக்கோலம். மேற் கூறிய நான்கு தரிசனங்களும் சாதாரண மனிதர்களாகிய நமக்கு என்றுமே கிடைக்கப் பெறாதவை. பரமபதம் செல்ல நாம் நித்ய சூரிகளும் அல்ல, பாற்கடலில் தரிசனம் பெற்றிட தேவர்களும் அல்ல. அவதார காலங்களில் நாம் எவ்வாறு இருந்தோம் என்றும் அறியோம். அந்தர்யாமித்வ தரிசனம் பெற நமக்கு கொடுப்பினையும் இல்லை. எனவேதான் மனிதன் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை கொண்டு, மரம் மற்றும் கற்கள் கொண்டு சிற்பங்கள் வடித்தும் பரந்தாமனின் திரு உருவத்தினை கோவில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். இதுவே அருச்சை. - உருவ வழிபாடு எனும் அர்ச்சாவதார தரிசனம். |
இவ்வாறு பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம் மற்றும் அருச்சை என ஐந்து நிலைகளில் பரந்தாமன் தரிசனம் தருவதை நம்மாழ்வார் வெகு அழகாய் "விண்மீதிருப்பாய் மலைமேல்நிற்பாய் கடற்சேர்ப்பாய் மண்மீதுழழ்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்" எனப் பாடுகின்றார். விண்மீதிருப்பாய் - பரமபத திருக்கோலம். - பரம். மலைமேல் நிற்பாய் - பற்பல அவதாரங்கள் எடுத்தது - விபவம். கடல் சேர்ப்பாய் - திருப்பாற்கடல் திருவடி தரிசனம் - வியூகம். மண்மீதுழழ்வாய் - கோவில்களில் நடைபெறும் உருவ வழிபாடு - அர்ச்சாவதரம். மறைந்துரைவாய் - அந்தர்யாமித்வம். |
|
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் பிரம்ம தேவரிடம் " நிகழும் ஒவ்வொரு யுகத்திலும் இவ் வுலகில் வாழும் உயிர்களின் பொருட்டு பற்பல அவதாரங்களை நான் எடுப்பேன். சில நேரங்களில் மனித ரூபம்மகவும் சில நேரங்களில் மிருக உரு கொண்டும் அவதரிப்பேன். மரம், உலோகங்கள் மற்றும் சிலை ருபங்கள் அன அர்ச்சாவதாரமாக வடிவம் கொள்வேன். மேலே குறிப்பிட்ட பொருட்களை கொண்டு சிற்ப நூல் சாஸ்திர விதிகளுடன் எனது அம்சங்களை உண்டாக்கி, இத்தகைய அர்ச்சாவதாரங்களை இப் பூவுலக கோவில்களில், என்னையே உள் நினைத்து வழிபடுவோருக்கு வைகுந்த பதவி அளிப்பேன். இத்தகைய கோவில்கள் மனிதர்களால் மட்டுமல்லாது, தேவதைகளாலும், மஹிரிஷிகளாலும் உருவாக்கப்படும். இவையன்றி சில யாதொருவராலும் நிர்மாணிக்கப்படாமல் தாமாகவே உண்டாகும் " என்றுரைத்தார் என்கின்றன புராணங்கள். இவ்வாறு ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் விமானத்தைப் போன்று தாமாகவே ஸ்வயம்புவாய் தோன்றிய திருத்தலங்கள் "ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரங்கள்" என வணங்கப்படுகின்றன. புராணங்களில் எடுத்துரைக்கப்பட்ட ஸ்தலங்கள் "பௌராணிகம்". ரிஷிகளால் உண்டானவை "ஆர்ஷம்" .தேவர்களாலும், தேவதைகளாலும் உண்டாக்கப்பட்டன "தைவிகம்" . வியாஸர் , பதஞ்சலி போன்ற ரிஷிகளாலும் முனிவர்களாலும் உண்டாக்கப்பட்டவை "ஸைத்தம". பிரம்மாதி தேவர்கள் தவம் செய்ய உண்டாக்கப்பட்டவை "தைவம்". மன்னர்களாலும், அடியார்களாலும் உருவாக்கப்பட்டவை "மானவம்". மானுடர்களால் உருவாக்கம் பெற்ற திருத்தலங்கள் "மானுஷம்" என்றம் வழிபடபட்டன. |
|
பன்னிரு ஆழ்வார்களும், 108 திவ்யதேசங்களும் - இவ்வாறு அமையப்பெற்றவற்றில் 108 திருத்தலங்களை மட்டுமே, எம் பெருமானின் அம்சங்களாய், இப்பூவுலகில் ஸ்ரீவைஷ்ணவம் வளர்த்திட அவதரித்த 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். விண்ணுலக திவ்யதேசங்களான பரமபதம் மற்றும் திருப்பாற்கடலைத தவிர இப் பூவுலகில் அமையப்பெற்ற திருத்தலங்கள் 106.
இத்திருத்தலங்கள் மட்டுமே திவ்யதேசங்களாய் மற்ற கோவில்களிற்கும் மேலானதொரு புனிதத்துவம் மிக்கதாய் வழிபடப்படுகின்றன. திவ்யம் என்றால் தெய்வத்தன்மை கொண்டது என்று பொருள்படும். |
இவ்வனைத்து திருத்தலங்களிலும் எம் பெருமான் நித்ய ஸாந்நித்யம் கொள்கின்றான். 11 ஆழ்வார்களும் பரந்தமனைப் போற்றிப் பாடிய பாசுரங்களின் தொகுப்பே "நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் " என்று வணங்கப்படுகின்றன. ஆழ்வார்களின் தித்திக்கும் தேன் தமிழால் பாடப்பெற்ற பாசுரங்கள் எனும் பாமாலையால் கட்டுண்டு மயங்கி சதா சர்வ காலமஉம் ஸ்ரீமந் நாராயணன் அங்கேயே வாழ்கின்றான் என்பது ஐதீகம். பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரைத் தவிர ( மதுரகவி ஆழ்வார் எந்த ஒரு தலத்தின் மீதும் பாசுரம் பாடியதில்லை, மாறாக அவர் பாசுரங்கள் அனைத்தும் அவர்தம் குரு நம்மாழ்வாரைப் பற்றி மட்டுமே உள்ளன ) மற்ற அனைவராலும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலங்கள் 108. இவற்றில் வட நாட்டில் அமைந்துள்ள திவ்யதேசங்கள் 11. எஞ்சிய 95 திவ்யதேசங்களும் தென்னாட்டிலேயே அமைந்துள்ளன. திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் சீர்காழி பகுதிகளில் அமைந்துள்ள சோழ நாட்டு திவ்யதேசங்கள் 40. கடலூர் மற்றும் பண்ருட்டியில் அமைந்துள்ள நடு நாட்டு திவ்யதேசங்கள் 2. காஞ்சிபுரம், மஹாபலிபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் அமைந்துள்ள தொண்டை நாட்டு திவ்யதேசங்கள் 22. கேரளாவில் அமைந்துள்ள மலை நாட்டு திவ்யதேசங்கள் 13. மதுரை, புதுகோட்டை மற்றும் திருநெல்வேலியில் அமைந்துள்ள பாண்டி நாட்டு திவ்யதேசங்கள் 18. நாராயண மந்திரம் மூன்று பதங்களாய் உள்ளதைப் போல் திவ்யதேசங்களும் கோவில், பெருமான் மற்றும் பாசுரங்கள் என மூன்று திவ்யங்கள் சூழ அமைந்துள்ளன. நாராயண மந்திரம் எட்டெழுத்துக்களால் ஆனது. சப்த புண்ணியங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனமும் சேர்ந்து திருமந்திர சக்தி பெற்று அஷ்டாச்சர மந்திரத்தின் பலனை தரக் கூடியதாக திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. ஷேத்ரம், வனம், நதி, ஸிந்து, புரம், புஷ்கரிணி மற்றும் விமானம் என ஏழு புண்ணியங்களும் ஒரு சேர அமையப் பெற்று, ஆழ்வார்களின் மங்களாசாசனமும் கூடவே அமையுமானால் அத் திருத்தலம் அஷ்டாச்சர மந்திர நிலை அடைகின்றது. இத்தகைய அமைப்புடைய தலங்களே திவ்யதேசங்கள் என்று வழிபடப் படுகின்றன. |
108 திவ்யதேசங்களில் பரந்தாமன், நின்ற, அமர்ந்த மற்றும் கிடந்த என தனது மூவகை திருக்கோலத்திலும் காட்சி தருகின்றான். இவற்றுள் நின்ற கோல திருத்தலங்கள் 67. அம்ர்ந்த திருக்கோலங்கள் 17. சயனத் திருக்கோலங்கள் 24. கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலங்கள் 39, மேற்கு நோக்கிய நின்ற திருக்கோலங்கள் 12, தெற்கு நோக்கிய நின்ற திருக்கோலங்கள் 14, வடக்கு நோக்கிய நின்ற திருக்கோலங்கள் 2. கிழக்கு நோக்கிய அமர்ந்த திருக்கோலங்கள் 13. மேற்கு நோக்கிய அமர்ந்தருளும் திருக்கோலங்கள் 3. தெற்கு நோக்கிய அமர்ந்த திருக்கோலங்கள் ஏதும் இல்லை |
|
வடக்கு நோக்கிய அமர்ந்த திருக்கோலம் 1. கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலங்கள் 18. மேற்கு நோக்கிய சயனத் திருக்கோலங்கள் 3. தெற்கு நோக்கிய சயனத் திருக்கோலங்கள் 3. வடக்கு நோக்கிய சயனத் திருக்கோலங்கள் ஏதும் இல்லை. இப் பூவுலகில் உள்ள 106 திவ்யதேசங்களின் தரிசனம் பெற்றிடும் ஒவ்வொரு பக்தனையும், விண்ணுலக திவ்யதேசங்களான பரமபதத்திற்கும்,, திருப்பாற்கடலிற்கும் எம் பெருமான் தன்னுடனேயே அழைத்துச் செல்கின்றான் என்பது ஸ்ரீ வைணவத்தின் கூற்று. 106 திவ்யதேசங்களையும் தரிசிக்க பேராவல் எளிதாக ஈடேற வேண்டும் என்ற ஆவலுடன், அப் பெரு முயற்சிக்கு உதவிடும் வகையில் எங்களால் இயன்ற வரை, 108 திவ்யதேசங்களைப் பற்றிய ஸ்தல வரலாறு, அமைவிடம், சிறப்புகள், வழிபாட்டுப் பலன்கள் போன்றவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஒரே சந்நதியில் நின்ற, இருந்த மற்றும் கிடந்த என மூன்று திருக்கோலங்களிலும் பெருமான் காட்சி தரும் திருநீர்மலை போன்ற ஸ்தலங்களும் உள்ளன. அமர்ந்த திருக்கோலத்தில் பெருமான் ஒரு கரத்தினை மேல் நோக்கிய வண்ணம் வைத்திருப்பதற்கு "அபயஹஸ்தம்" என்று பெயர். மற்றொறு கரத்தினை கீழ் நோக்கி வைத்திருப்பதற்கு "என்னடி கீழ் சரணடைவாய்" என்று பொருள. திவ்யதேசங்களைப் பற்றிய முழு விவரங்களையும், திருத்தலப் பெருமைகளையும், வழிபாட்டு பயன்களையும் அறிந்து கொண்டு, இயன்றவரை திவ்யதேசங்களை தரிசனம் செய்திட வேண்டும் எனும் பேராவல் கொண்ட பக்தர்களுக்கு உதவிடும் வகையில், இப் பூவுலக 106 திவ்யதேசங்களின் ஸ்தல வரலாறு மற்றும் வழிபாட்டு பலனகளை எங்களால் இயன்றவரை தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் ஏதேனும் குறைகளோ, பிழைகளோ இருப்பின் தயவு கூர்ந்து அறிவுரைக்குமாறும், எங்களது இப் பணி சிறக்க வெற்றி பெற இந்த இணையதளத்தினைப் பற்றி உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம். |
|
|
|